×

திருமுறை கண்ட மூர்த்தி

திருவாரூரை தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்து வந்த குலசேகர ராஜ ராஜ மன்னர், தமது சபையில் வரும் அன்பர்கள் மூலம் தேவாரத்துள் ஓரோர் பதிகங்களை ஓதக்கேட்டு, கையிரண்டும் உச்சிமேலேற, கண்ணீர் கரைந்தோட, சிவபெருமானை துதித்து வந்தார்.அங்ஙனம் இருக்கையில் ஒரு நாள் காலை, திருநாரையூரிலே ஓர் ஆதிசைவப் பிராமணருக்கு ஒரு ஆண் மகன் தோன்றினான். அவன் தான் நம்பியாண்டார் நம்பி. உபநயனஞ் செய்யப்பெற்று, வேதம் முதலிய கலைகளைப் பயின்றுவரும் நாளில், பிதாவாயினார் ஓரூர்க்குச் செல்ல, அவர் கட்டளைப்படி (சுயம்புமூர்த்தி) பொல்லாப்பிள்ளையாருக்குத் திருமஞ்சனம் முதலியன எல்லாம்செய்து, நிவேதனத்தை அவர் திருமுன்னிலையில் வைத்து, “எம்பெருமானே!

அதனைத் திருவமுது செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். பிள்ளையார் திருஅமுது செய்யாதிருப்பது கண்டு, அப்புத்திரர் வெம்பி, அடியேன் ஏதேனுந்தவறு செய்ததுண்டோ? அடியேன் நிவேதித்ததை உண்ணாதது என்ன?” என்று தமது தலையினை கல்லில் மோதலானார். அப்பொழுது பிள்ளையார் “நம்பீ! பொறு” என்று தடுத்து அவ்வமுது முழுவதையும் உவந்து திருவமுது செய்தருளினார்.நம்பியாண்டார் நம்பி “எந்தையே! அடியேன் இனிப் பாடசாலைக்குச் சென்றால் உபாத்தியாயர் அடிப்பார். ஆதலாலே வேதமுதலிய கலைகளைத் நீரே ஓதித் தரவேண்டும்” என்று கூறினார். பரமாச்சாரியராகிய விநாயகரும் ஓதுவிக்க, நம்பியாண்டார் நம்பி ஓதி மகிழ்ந்தார், அதுபோல மற்றைநாளும் நிகழ, நம்பியாண்டார் நம்பி வீற்றிருந்திடுஞ் செய்தியை வேந்தர் கேட்டு, திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாருக்கு நம்பியாண்டார் நம்பி நிவேதிக்கும்படி வாழைப்பழம், தேன், அவல், எள்ளுருண்டை முதலியவற்றோடு அந்நகரில் வந்து சேர்ந்தார்.

அங்ஙனம் வந்தவர் நம்பியினுடைய பாதங்களை வணங்கி, “இவற்றைப் பொல்லாப்பிள்ளையாருக்கு இப்பொழுதே நிவேதிக்க” என்று சொன்னார், நம்பி, அரசர் கூறியவற்றைக் கேட்டு யானைமுகக் கடவுளுடைய திருவடிகளை வணங்கி, “அரசன் தொகுத்த இப்பொருள்களை நிவேதித்தருளுக” என்று படைத்தனர். விநாயகர் துதிக்கையினால் ஏற்றுத் திருவமுது செய்தருளினார். நம்பியாண்டார்நம்பிக்கு அருள்புரிந்து தில்லைச் சிதம்பரத்திலிருந்த தேவாரத், திருமுறைகளை உலகத்தவர் உய்யும் வண்ணம், வெளியுலகிற்குக் கொண்டுவர அருள்பாலித்தவர் விநாயகப் பெருமான். அதனால் திருமுறைகண்டமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.

சு. இசக்கிமுத்து

Tags : Thirumurai Kanda Murthy ,
× RELATED வெற்றிக்கு வித்திடும் குலதெய்வ வழிபாடு!